தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பல்லடத்தில் பெயிண்டரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
பெயிண்டர் கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டியை சேர்ந்தவர் மங்களேஸ்வரன் (வயது 43). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னூரில் உள்ள தனியார் நூற்பாலையில் பெயிண்டராக தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இதே நூற்பாலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த வழிவிட்டான் அய்யனார் (46) என்பவரும் தங்கி பெயிண்டராக வேலை செய்தார். இவர்களுடன் சக தொழிலாளர்களும் சேர்ந்து நூற்பாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்தனர்.
இந்தநிலையில் கடந்த 27-2-2021 அன்று இரவு மங்களேஸ்வரன், வழிவிட்டான் அய்யனார் மற்றும் உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் ஆகியோர் பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மது பாரில் மது குடித்துள்ளனர். அப்போது மங்களேஸ்வரன், வழிவிட்டான் அய்யனாரின் மனைவி குறித்து தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் உடன் வந்த தொழிலாளர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து நூற்பாலைக்கு அழைத்துச்சென்று அறையில் தங்க வைத்தனர்.
ஆயுள் தண்டனை
நள்ளிரவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வழிவிட்டான் அய்யனார், இரும்பு கம்பியால் மங்களேஸ்வரனை தலை, முகத்தில் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து இறந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வழிவிட்டான் அய்யனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலை குற்றத்துக்கு வழிவிட்டான் அய்யனாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.
----