காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு


காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை வழக்கு:  7 பேருக்கு ஆயுள் தண்டனை  விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
x

காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

விழுப்புரம்



விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். அதே கிராமம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் லட்சுமணன் (வயது 26). இவர் சரவணனின் உறவுக்கார பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இதனை சரவணனின் அண்ணன் சங்கரின் மகன்களான ராஜேஷ், ராஜபிரபு ஆகியோர் கண்டித்தனர். இதனால் சங்கர், சரவணன் குடும்பத்தினர் மீது லட்சுமணனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த இருவரின் குடும்பத்தில் யாரையாவது ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

இந்நிலையில் கடந்த 16.1.2014 அன்று சங்கரின் குடும்பத்தினர் சரவணன் வீட்டிற்கு பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றனர். அன்று மாலை 3 மணியளவில் லட்சுமணன், அவரது அண்ணன் நாகராஜ் (27), நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த தீனா என்கிற வெங்கடேஷ் (27), மணி (26), சரண் (26), பாபு (26), அய்யப்பன் (30) ஆகிய 7 பேரும் இரும்புக்குழாய், கத்தி போன்ற ஆயுதங்களுடன் சரவணனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை தகாத வார்த்தையால் திட்டியதோடு சரமாரியாக தாக்குதலும் நடத்தினர்.

வாலிபர் கொலை வழக்கு

இதில் சரவணனின் மகன் கோபி(19) தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதோடு ராஜேஷ், சரவணன், ராஜபிரபு ஆகியோரும் காயமடைந்தனர். உடனே அவர்கள் 4 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் கோபி, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதில் உடல்நலம் தேறிய நிலையில் கோபி, சில நாட்களில் வீடு திரும்பினார். ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 5.10.2014 அன்று இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமணன் உள்ளிட்ட 7 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

7 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) வெங்கடேசன், குற்றம் சாட்டப்பட்ட லட்சுமணன் உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள் 7 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story