வாலிபருக்கு ஆயுள் தண்டனை-மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு


வாலிபருக்கு ஆயுள் தண்டனை-மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
x

திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை

மதுரை, ஜூன்.9-

திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சம்மதம் தெரிவிக்கவில்லை

தேனி மாவட்டம் கம்பம் சுருளிபட்டியைச் சேர்ந்தவர் மீனா(வயது 36). இவரது கணவர் பரமன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டியில் பரமனின் சகோதரர் குடும்பத்தினர் வசித்தனர். அவர்கள் மீனாவின் மகனை வளர்த்து வந்தனர். வாரந்தோறும் உசிலம்பட்டியில் உள்ள தனது மகனை பார்க்க மீனா வருவது வழக்கம். அப்போது அவருடைய தம்பி ஈஸ்வரன் (30) உடன் வருவது வழக்கம். அப்போது அந்த வீட்டில் இருந்த ரேவதி(22) என்ற இளம்பெண்ணை ஒருதலைப்பட்சமாக ஈஸ்வரன் காதலித்துள்ளார். தனது விருப்பத்தை ரேவதியிடம் தெரிவித்தும், அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

குத்திக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன், தனக்கு கிடைக்காதது, யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று முடிவு செய்தார். கடந்த 2014-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த ரேவதியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவர் சம்மதிக்கவில்லை.

இதனால் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால், ரேவதியின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து ஈஸ்வரனையும், அவரது சகோதரி மீனாவையும் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் லதா சாந்தி ஆஜரானார்.

முடிவில், ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள்தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார். மீனா விடுதலை செய்யப்பட்டார்.


Next Story