தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை


தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை
x

சொத்து தகராறில் உறவினர்கள் 2 பேரை கொன்ற வழக்கில் தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி

திருச்சி, ஜூன்.15-

சொத்து தகராறில் உறவினர்கள் 2 பேரை கொன்ற வழக்கில் தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அண்ணன்-தம்பி

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள வெங்கடாஜலபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ். இவரது மகன் நெப்போலியன். தனிஷ்லாசின் தம்பி ஆரோக்கியசாமி (வயது 69). இவருடைய மனைவி தனமேரி (63). இவர்களின் மகன் சசிக்குமார் (41). தனிஷ்லாஸ், ஆரோக்கியசாமி வீடுகள் அருகருகே உள்ளன.

இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊரில் உள்ளன. இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 9-4-2014 அன்று காலை 9 மணி அளவில் தனிஷ்லாசுக்கும், அவருடைய தம்பி ஆரோக்கியசாமிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆரோக்கிய சாமி சத்தம் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

தந்தை, மகன் குத்திக்கொலை

பின்னர் அன்று இரவு 7 மணி அளவில் ஆரோக்கியசாமி, தனமேரி, சசிக்குமார் ஆகியோர் வீட்டின் முன் நின்று கொண்டு தனிஷ்லாஸ் குடும்பத்தினரை திட்டியுள்ளனர். இதை கேட்கச்சென்ற தனிஷ்லாசை சசிக்குமார் குத்து கோலால் நெஞ்சில் குத்தியுள்ளார்.

இதைப்பார்த்து நெப்போலியன் தடுக்க சென்ற போது, அவரையும் சசிக்குமார் குத்து கோலால் குத்தினார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஆரோக்கியசாமியும், தனமேரியும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த இரட்டை கொலை குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார், ஆரோக்கியசாமி, தனமேரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு திருச்சி 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பி.தங்கவேல் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு கூடுதல் வக்கீல் எல்.மோகன்தாஸ் ஆஜரானார். இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், குற்றம்சாட்டப்பட்ட தனிஷ்லாசின் தம்பி மகன் சசிக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அவருடைய தம்பி ஆரோக்கியசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், ஆரோக்கிய சாமியின் மனைவி தனமேரிக்கு ஒராண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story