மூதாட்டியை உயிரோடு எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு


மூதாட்டியை உயிரோடு எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை  விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா பள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கல்வராயன் மனைவி நாவம்மாள் (வயது 75). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகனான கூலி வேலை செய்து வரும் முத்துகிருஷ்ணன் என்கிற அன்னக்கிளியின் (34) வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் படுத்து தூங்குவார்.

இதனால் நாவம்மாளிடம், ஏன் எனது வீட்டு திண்ணையில் படுத்து தூங்குகிறாய் என்று முத்துகிருஷ்ணன் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 15.3.2018 அன்று நள்ளிரவில் நாவம்மாள், முத்துகிருஷ்ணன் வீட்டு திண்ணையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்த முத்துகிருஷ்ணன், ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து வந்து நாவம்மாள் மீது ஊற்றி உயிரோடு தீ வைத்து கொளுத்தினார். இதில் பலத்த தீக்காயமடைந்த நாவம்மாள் திண்டிவனம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஒரு வாரம் கழித்து இறந்தார்.

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து நாவம்மாளின் பேரன் கோபிராஜ், செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், முத்துகிருஷ்ணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட முத்துகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.


Next Story