கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை


கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

கரூர்

கள்ளக்காதல்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). இவரது மனைவி காயத்ரிதேவி(25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் காயத்ரிதேவி அவ்வப்போது கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான கமலக்கண்ணன்(25) என்பவருக்கும், காயத்ரிதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மணிகண்டன், மனைவி காயத்ரிதேவியை கண்டித்துள்ளார். இதுகுறித்து காயத்ரிதேவி, கமலக்கண்ணனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மணிகண்டனை மது அருந்துவதற்காக கரூர் மணல்மேடு பகுதிக்கு கமலக்கண்ணன் அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் மது அருந்திக்கொண்டு இருக்கும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கைது

இதில் அங்கிருந்த கட்டை மற்றும் கற்களை கொண்டு மணிகண்டனை தாக்கி கமலக்கண்ணன் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டனின் மனைவி காயத்ரிதேவியின் தூண்டுதலின் பேரில் கமலக்கண்ணன், மணிகண்டனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு ரூபன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

வழக்கினை விசாரித்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மணிகண்டனை கொலை செய்ய திட்டம் தீட்டிய காயத்ரிதேவி மற்றும் கொலை செய்த கமலக்கண்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரூபன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் கரூர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story