இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறினால் வாழ்க்கை பிரகாசிக்கும்


இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறினால் வாழ்க்கை பிரகாசிக்கும்
x

அரசு வேலை 4 சதவீதம் மட்டுமே உள்ளது என்றும், இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறினால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி வி.கே.சிங் பேசினார்.

வேலூர்

பட்டமளிப்பு விழா

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கவர்னர் பட்டம் வழங்கினார்

விழாவில் முனைவர் பட்டங்கள் பெற்ற 417 பேர் உள்பட 564 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார். மொத்தம் 1,13,275 மாணவ- மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், பதிவாளர் விஜயராகவன், தேர்வு மைய கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் உள்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொழில் முனைவோர்களாக

விழாவில் மத்திய மந்திரி வி.கே.சிங் பேசியதாவது:-

பட்டங்களை பெற்றுள்ள மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். கல்லூரி படிப்பை முடித்துள்ள நீங்கள் உலகில் பல சவால்களை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நம் நாட்டின் வளர்ச்சி பாதையில் மாணவர்களின் பங்கு அதிக அளவில் இருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் இலக்கினை அடைய கடுமையான உழைப்பை பயன்படுத்த வேண்டும். தொழில் முனைவோர்களாக மாறினால் தங்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். தொழில் முனைவோர்களாக மாறும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வகைகளில் உதவிகளை அளித்து வருகிறது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

4 சதவீதம் மட்டுமே அரசு வேலை

மத்திய அரசு பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களை நம்பியுள்ளது. இந்தியா மற்ற நாடுகளை விட சுய தொழில் தொடங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் முதலீடு செய்துள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். படித்த இளைஞர்கள் அனைவரும் அரசு வேலையை நம்பி இருக்க வேண்டாம். ஒட்டு மொத்தமாக 4 சதவீதம் அளவிற்குதான் அரசு துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளது. மீதமுள்ள 96 சதவீதம் தனியார் வேலை வாய்ப்புகள் உள்ளது.

2015-ம் ஆண்டில் இந்தியாவில் 428 சுயதொழில் நிறுவனங்கள் இருந்தன. அதன் பிறகு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், தற்பொழுது 80 ஆயிரம் சுய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. எனவே இளைஞர்கள் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story