கொடைக்கானலில் சாரல் மழை; சுற்றுலா பயணிகள் அவதி
கொடைக்கானலில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த வாரங்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும் அதிகாலையில் உறைபனியுடன் கூடிய குளிரும், பகலில் வெப்பமும் நிலவுகிறது. இந்தநிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்தநிலையில் மதியம் 3 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான சூழல் உருவானது. சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்தது. மேலும் அடர்ந்த பனிமூட்டமும் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
குறிப்பாக ஏரிச்சாலை, 7 ரோடு சந்திப்பு, கொடைக்கானல் பஸ் நிலையம், மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையுடன் மூடுபனி நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டினர். இருப்பினும் மழையில் நனைந்தபடியே சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களை பார்வையிட்டு ரசித்தனர்.