புத்தி சொன்னதால் ஆத்திரம்: இளம்பெண்களை விரட்டி சென்று இடித்து தள்ளி மின்னல் வேகத்தில் பறந்த ஆட்டோ டிரைவர்...தீயாய் பரவும் வீடியோ...!


புத்தி சொன்னதால் ஆத்திரம்: இளம்பெண்களை விரட்டி சென்று இடித்து தள்ளி மின்னல் வேகத்தில் பறந்த ஆட்டோ டிரைவர்...தீயாய் பரவும் வீடியோ...!
x

அந்த பெண்களை நோக்கி ஆபாசமாக பேசி எச்சரித்ததோடு அவர்களை செல்லவிடாமலும் தடுத்தார்.

சேலம்,

சேலம் மாநகரில் அழகாபுரம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஜங்சன், 4 ரோடு, 5 ரோடு, செவ்வாய்ப்பேட்டை, குகை, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நிலையில் சேலம் மாநகரில் வின்சென்ட் பிரதான சாலையில் ஆட்டோ ஒன்று தாறுமாறாக செல்வதை கண்டு அந்த வழியாக மொபட் ஓட்டிச்சென்ற பெண்கள் கையை நீட்டி சத்தம் போட்டுள்ளனர். இதனால் திரும்பி வந்த ஆட்டோ டிரைவர் தன்னை சத்தம் போட்ட பெண்கள் சென்ற மொபட்டை வழிமறித்து வம்பு செய்தார். மேலும் அந்த பெண்களை நோக்கி ஆபாசமாக பேசி எச்சரித்ததோடு அவர்களை செல்லவிடாமலும் தடுத்தார்.மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனரை சத்தம் போட்டு வழிவிட செய்தனர். இதனையடுத்து இரு பெண்களும் அங்கிருந்து சென்றனர்.

ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்களின் மொபட்டை பின் தொடர்ந்து சென்றார். இந்த காட்சிகளை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துச்சென்றனர். ஆட்டோ டிரைவர் மின்னல் வேகத்தில் அந்த பெண்களை பின் தொடர்வதை கண்டு அந்த நண்பர்களும் அந்த வழியாக சென்றனர். அதற்குள்ளாக அந்த இரு பெண்கள் சென்ற மொபட்டை இடித்து சாலையில் தள்ளிய ஆட்டோ நிற்காமல் சென்று விட்டது. கீழே விழுந்ததால் கைகளில் சிராய்ப்பு காயங்களுடன் அவதிப்பட்ட இரு பெண்களையும் அங்கிருந்த பெண்கள் மீட்டு அசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். புத்தி சொன்ன பெண்களை பழிவாங்கும் நோக்கில் பட்டப்பகலில் பின் தொடர்ந்து சென்று ஆட்டோவால் மோதி சாய்த்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், இளம்பெண்களை இடித்துச்சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.



Next Story