இருண்டு கிடக்கும் புதிய கொள்ளிடம் பாலம்


இருண்டு கிடக்கும் புதிய கொள்ளிடம் பாலம்
x

கல்லணையில் இருண்டு கிடக்கும் புதிய கொள்ளிடம் பாலத்தில் உயர்கோபுர மின் விளக்குகளை ஒளிர வைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

கல்லணையில் இருண்டு கிடக்கும் புதிய கொள்ளிடம் பாலத்தில் உயர்கோபுர மின் விளக்குகளை ஒளிர வைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் பாலம்

மாமன்னன் கரிகாலன் பெருமையை பறைசாற்றும் அணையாக விளங்குவது கல்லணை. கல்லணையில் டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் மதகுகள் மற்றும் ஷட்டர்கள் அமைந்துள்ளன. இதனால் இந்த பாலங்களின் வழியாக கனரக போக்குவரத்து நடைபெறுவதில்லை.இதனால் திருச்சி- தஞ்சையை இணைக்கும் வகையில் கல்லணையில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக கல்லணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்காக ஒரு கிலோ மீட்டர் நீள பாலம் கட்டப்பட்டது.

சுற்றுலா பயணிகள்

இந்த பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்திற்கு நேரடியான போக்குவரத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. முழுமையாக பாலம் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து இந்த பகுதியில் உள்ள புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயம், கோவிலடி பெருமாள் கோவில், திருவையாறு ஐயாறப்பர் கோவில்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

மின்விளக்குகள் எரிவதில்லை

திருவையாறு பகுதியில் இருந்து விவசாய விளை பொருட்கள் லாரிகள் மூலம் திருச்சிக்கு புதிய பாலத்தின் வழியாக எளிதாக எடுத்து செல்லப்படுகின்றன. புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் மின் விளக்குகள் பொருத்த கம்பங்கள் நடப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் 2 பகுதிகளிலும் உயர் மட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மின்விளக்குகள் காட்சி பொருளாக உள்ளது. இரவில் பாலத்திலும் உயர் மட்ட மின்விளக்குகள் எரிவதில்லை.

நடவடிக்கை

இதனால் இரவில் கார்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களில் வருவோர் இருள் சூழ்ந்த பாலத்தை அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். சுற்றுலா பெருமை வாய்ந்த கல்லணையை இந்த பாலத்தில் இருந்து பார்ப்பது ஒரு ரம்மியமான ஒரு உணர்வை தரும். புதிய பாலத்தில் நின்று கொண்டு கொள்ளிடம் மதகுகளின் வழியாக வெளியேறும் தண்ணீரை பார்ப்பது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். இந்த பாலத்தில் ஒரு பகுதி தஞ்சை மாவட்ட கிராம பஞ்சாயத்திலும் மற்றொரு பகுதி திருச்சி மாவட்ட கிராம பஞ்சாயத்திலும் வருகிறது.எனவே அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து கல்லணையில் இருண்டு கிடக்கும் புதிய கொள்ளிடம் பாலத்தில் உயர்கோபுர மின் விளக்குகளை ஒளிர வைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story