கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் மழை வெள்ளம் ஏற்படும் அபாயம்


கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் மழை வெள்ளம் ஏற்படும் அபாயம்
x

கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் வெள்ளம் ஏற்படும் நிலை உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து மற்ற ஏரிகளுக்கு உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவண்ணாமலை

கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் வெள்ளம் ஏற்படும் நிலை உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து மற்ற ஏரிகளுக்கு உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கால்வாய் ஆக்கிரமிப்புகள்

தமிழகத்தில் பருவ மழைக்கு முன்பு அனைத்து நீர்நிலைகளின் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவ மழையின் போது பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபாி நீர் வெளியேறியதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள திருவண்ணாமலை - போளூர் சாலை, திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் பல்வேறு சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் மழை காலங்களில் இயற்கையாகவே நீர் ஊற்று ஏற்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளங்களை நிரப்புகிறது.

பின்னர் அங்கிருந்து மழைநீர் ஆடையூர் ஏரிக்கு வருகிறது. ஆடையூர் ஏரி நிரம்பி மழைநீர் வேங்கிக்கால் ஏரிக்கு வருகிறது.

கால்வாய் வசதி

அங்கிருந்து உபரி நீர் சேரியந்தல் ஏரி, நொச்சிமலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி, கொம்பன் ஏரிக்கு சென்று துரிஞ்சலாற்றை அடைகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெய்த மழையின் போது வேங்கிக்கால் ஏரி நிரம்பி அதில் இருந்து வெளியேறிய மழை நீரினால் பெரிய அளவிலான வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் வேங்கிக்கால் குறிஞ்சி நகர், கீழ்நாத்தூர், நொச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

ஆடையூர் ஏரியில் இருந்து வேங்கிக்கால் ஏரிக்கு மழைநீர் செல்ல சிறு, சிறு பிரச்சினை இருந்தாலும் முறையான கால்வாய் வசதி இருப்பதால் மழைநீர் எந்தவித தடையுமின்றி வேங்கிக்கால் ஏரியை வந்தடைகிறது.

வேங்கிக்கால் ஏரியில் இருந்து சேரியந்தல் ஏரி, நொச்சி மலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி, கொம்பன் ஏரிக்கு சென்று துரிஞ்சலாற்றிற்கு மழை நீர் செல்ல போதிய அளவில் கால்வாய் வசதி இல்லை.

மழைநீர் தேங்க வாய்ப்பு

கால்வாய் சென்ற பகுதிகளில் தற்போது பல்வேறு ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெள்ளப்பாதிப்பின் போது நெடுஞ்சாலை பகுதியில் போதிய அளவில் கால்வாய், சிறு பாலங்கள் இல்லாததால் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தற்போது பல கோடி ரூபாய் மதிப்பில் திருவண்ணாமலை - போளூர் சாலை, திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை - திண்டிவனம் சாலை ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியில் கால்வாய்கள், பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இதனால் மட்டும் வேங்கிக்கால் ஏரியின் உபரிநீர் மற்ற ஏரிகளுக்கு சென்று விடுமா? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து உள்ளது.

ஏனென்றால் வேங்கிக்கால் ஏரியின் உபரி நீர் மற்ற ஏரிகளுக்கு செல்லும் நீர்போக்கு கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால் தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால் மழைநீர் செல்ல போதிய வழியின்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் மீண்டும் புகுந்து இந்த வருடமும் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது.

தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

இதனால் பல கோடி ரூபாயில் கால்வாய் மற்றும் சிறுபாலங்கள் அமைத்து எந்த பயனும் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் வேங்கிக்கால் ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மீண்டும் மழை பெய்தால் உடனடியாக வேங்கிக்கால் ஏரி நிரம்பி மழைநீர் வெளியேற வாய்ப்புகள் உள்ளது.

எனவே மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறையினர் அதிகாரிகளும் இணைந்து வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் சேரியந்தல் ஏரி, நொச்சி மலை ஏரி, கீழ்நாத்தூர் ஏரி, கொம்பன் ஏரிக்கு செல்லும் வகையில் அனைத்து நீர்வரத்து மற்றும் நீர் போக்கு கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் இந்த வருடமும் மழைநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்படும்

. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story