பஞ்சலிங்கங்களுக்கு சிறப்பு பூஜை
தளி,
உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒரே குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர சப்தகன்னிகள், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலில் கிருத்திகை, பிரதோஷம், அமாவாசை, சிவராத்திரி, பவுர்ணமி, நவகிரக பெயற்சி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று பிரதோஷத்தை யொட்டி மும்மூர்த்திகளுக்கும் மலை மீது உள்ள பஞ்சலிங்கங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.பக்தர்கள் பாதுகாப்பு கருதி பிரதோஷ தினத்தன்று மட்டும் வனப்பகுதியில் உள்ள பஞ்ச லிங்கங்களை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் திருமூர்த்திமலைக்கு வருகை தந்திருந்தனர். இதனால் கோவில், அருவி, அடிவாரப் பகுதி, அணைப்பகுதி நீச்சல் குளம் உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
---