எடப்பாடி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு
எடப்பாடி அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
எடப்பாடி:
டாஸ்மாக் மதுக்கடை
எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி ஓணம்பாறை காட்டுவளவு பகுதியில் அரசு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு 10 மணி அளவில் விற்பனையாளர்கள் விற்பனை முடித்து, கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் மீண்டும் கடை திறக்கப்பட்ட போது, கடையின் பின்பகுதியில் இருந்து வெளிச்சம் வந்ததை கண்டு விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது கடையின் வடக்கு புறமுள்ள சுவரில் இரவு நேரத்தில் துளையிட்ட மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து டாஸ்மாக் மதுக்கடை கண்காணிப்பாளர் சரவணன் மூர்த்தி பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, திருட்டு போன மதுபாட்டில்கள் மதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விலை உயர்ந்த 40-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிச்சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு மது பாட்டில்களை திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.