சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு


சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு
x

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் வேளக்குடி கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக பால்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வியாபாரம் முடிந்ததும் பால்ராஜ் மற்றும் கடை ஊழியர்கள் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் காலையில் கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். தொடர்ந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு இருந்தது. மேலும் கடையில் இருந்த மதுபாட்டில்களும் சிதறிக்கிடந்தன. சில மதுபாட்டில்களையும் காணவில்லை.

வலைவீச்சு

நள்ளிரவில் மர்மநபர்கள் கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கடையில் இருந்த மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. திருடுபோன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.9 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கடையை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story