தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் சக்திவேல் (வயது 27). இவர் மீது விழுப்புரம் நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வாய்க்கால்மேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாகவும், கடத்தியதாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் சக்திவேலை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர் சாராயம் விற்பனை செய்து வந்ததால் அவருடைய இத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சக்திவேலை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதையடுத்து சக்திவேலை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் விழுப்புரம் நகர போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.