சாராயம் காய்ச்சி விற்றவர் கைது
சாராயம் காய்ச்சி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், கல்லக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் ஊராட்சி சிலுவைப்பட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருவெறும்பூர் மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் சிலுவைப்பட்டி கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
மேலும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அப்பகுதியில் வடக்கு தெருவை சேர்ந்த மூக்கன் என்ற எட்வின் செல்வகுமார்(வயது 42) என்பதும், அவர் சாராயம் காய்ச்சி விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை அழைத்து சென்று அவரது தோட்டத்தில் சாராய ஊறல் போட்டதற்கான பேரல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான அண்டா உள்ளிட்ட பொருட்களையும், கேனில் இருந்த 10 லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் மூக்கனை கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.