சாராயம் விற்றவர் கைது
சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பில்லங்குளம் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவை தொடர்ந்து மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் பில்லங்குளம் உறைகிணறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த கொளஞ்சியின் மகன் சதீஷ்(22), தனது மோட்டார் சைக்கிளில் சாராயம் வைத்து விற்றது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், சதீஷை கைது செய்து 60 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் 6 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கிராமப்பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு 9498100690 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவித்தவரின் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.