மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும்-அண்ணாமலை பேட்டி


மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும்-அண்ணாமலை பேட்டி
x

தமிழகத்தில் மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருச்சி

தமிழகத்தில் மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மாநில செயற்குழு கூட்டம்

பா.ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு தமிழக அரசு கூடுதல் விலை அளித்து கொள்முதல் செய்ய வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை வழிமொழிந்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை பேசியதாவது:-

ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

விவசாய உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இதற்காக மத்திய அரசு விவசாய உள்கட்டமைப்பு நிதி ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது. தமிழகத்துக்கு மட்டும் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

3 புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பல்வேறு பலன் அளிக்கும் அம்சங்கள் இருந்தன. ஆனால், எதிர்க்கட்சிகள் விவசாயிகளை பகடைக்காய்களாக மாற்றி போராட செய்ததால், அந்த பலன் கிடைக்கவில்லை. ஆனாலும் விவசாயிகளை வாக்கு வங்கியாக பார்க்காமல் இன்று வரை 19 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் எந்தவித விளம்பரமும் இன்றி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள்.

விவசாயிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றால் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்க வேண்டும். அதற்காக விவசாய உற்பத்தியாளர் சங்கங்களை மாவட்டந்தோறும் தொடங்க வேண்டும். இதற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

யாருக்கும் பாதிப்பு ஏற்படாது

மின்சார திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழக மின்துறையில் நடைபெறும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிடும். ஆவின் நிறுவனம் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களை உற்பத்தி செய்து வருவாயை பெருக்கமுயற்சி செய்யாமல் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி உள்ளனர்.

இந்தியாவில் சமூக சீர்த்திருத்ததிற்காக பெரியார் போன்று பலர் பாடுபட்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு சிலை வைப்போம். பெரியாரின் சிலைக்கு பா.ஜனதா கட்சியினரால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் மதுக்கடைகளை அடைத்துவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து காவிரி ஆற்றங்கரைக்கு விவசாயிகள் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்தனர்.


Related Tags :
Next Story