பாப்கார்னில் உயிரோடு கிடந்த கரப்பான் பூச்சியால் பரபரப்பு
திருச்செந்தூர் தியேட்டரில் வாங்கிய பாப்கார்னில் உயிரோடு கிடந்த கரப்பான் பூச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் உள்ள சினிமா தியேட்டரில் பகாசூரன் படம் வெளியானது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் படம் பார்ப்பதற்காக திருச்செந்தூரை சேர்ந்த மகாதேவி என்பவர் சென்றுள்ளார். இடைவேளையின்போது அங்குள்ள கேண்டீனில் பாப்கார்ன் வாங்கியுள்ளார். அதில் கரப்பான்பூச்சி உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இதுதொடர்பாக அங்குள்ள நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். ஆனால் கேண்டீன் பணியாளர்கள் புகார் தெரிவித்த பெண்ணிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாதியில் தியேட்டரை விட்டு வெளியேறினார். தற்போது பாப்கார்னில் கரப்பான் பூச்சி கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியது.
தியேட்டரில் தரமற்ற தின்பண்டங்கள் விற்கப்படுவதாக மகாதேவி கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுபாப்புத்துறை அலுவலர் சக்திமுருகன் தலைமையில் ஊழியர்கள் தியேட்டர் கேண்டீன், குடோன்களை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின்னர் அதிகாரிகள் கேண்டீனுக்கு தற்காலிகமாக 'சீல்' வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.