லைவ் அப்டேட்ஸ்: டைரக்டரும், நடிகருமான மனோபாலா மறைவு - திரைத்துறையினர் அஞ்சலி...!
டைரக்டரும், நடிகருமான மனோபாலா மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றர்.
சென்னை,
Live Updates
- 3 May 2023 4:12 PM IST
மனோபாலா மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- 3 May 2023 4:09 PM IST
மனோபாலா மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- 3 May 2023 4:06 PM IST
சினிமா டைரக்டர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் மனோபலா(69). தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார்.
மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
கடந்த ஒரு மாத காலமாக மனோபாலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகரின் மனோபாலாவி உடலுக்கு ஏராளமான திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணி அளவில் தகனம் செய்ய உள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.