மூங்கில் தொழில் நலிவடைந்ததால் வாழ்வாதாரம் பாதிப்பு
மூங்கில் தொழில் நலிவடைந்ததால் வாழ்வாதாரம் பாதிப்பு
கும்பகோணம் அருகே மூங்கில் தொழில் நலிவடைந்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மூங்கில் தொழில்
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூங்கில் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். இவர்கள் மூங்கிலில் ஏணி, கூடை, முறம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயார் செய்து, அதனை விற்பனை செய்து வருமானம் ஈட்டி அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் வியாபாரம் பாதிக்கப்பட்டு மூங்கில் தொழில் முற்றிலும் நலிவடைந்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிக வருமானம் கிடைத்தது
இதுகுறித்து மூங்கில் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில், நாங்கள் பாரம்பரியமாக மூங்கில் தொழிலை மேற்கொண்டு வருகிறோம். முன்பு மூங்கிலால் தயாரிக்கப்படும் ஏணி, கூடை உள்ளிட்ட பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக தேவை இருந்து வந்தது. இதனால் நாங்கள் தயாரித்த மூங்கில் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து அதிக வருமானம் கிடைத்து வந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து கூடை, முறம் உள்ளிட்டவற்றின் தேவை குறைய தொடங்கியது.
வாழ்வாதாரம் கேள்வி குறி
மூங்கில் பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூங்கிலின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மூங்கிலை வெட்டி வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்து அதனை மூங்கில் பொருட்கள் தயாரிக்க ஆகும் உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் மூங்கில் பொருட்களின் விற்பனை குறைந்து உரிய விலையும் கிடைக்காததால் இந்த தொழில் தற்போது முற்றிலும் நலிவடைந்து இந்த தொழிலை நம்பி உள்ள எங்களைப் போன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தமிழக அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கையை மேற்கொண்டு மூங்கில் தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றனர்.