கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நரிகுறவர், பழங்குடியினர் மக்களுக்கு வாழ்வாதார பயிற்சி அளிக்க வேண்டும் மாவட்ட திறன்குழுவிற்கு கலெக்டர் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நரிகுறவர், பழங்குடியினர் மக்களுக்கு வாழ்வாதார பயிற்சி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் மாவட்ட திறன்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த பிரிவில் தொழில் சார்ந்த திறன் பயிற்சி அளிக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தேவையான திறன் சார்ந்த முழு விபர அறிக்கை மாவட்ட திறன் குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், குறுகிய கால பயிற்சி திட்டங்கள் மூலம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும். கல்வராயன்மலை பகுதியில் வாழ்வாதாரமற்ற பிற்படுத்தப்பட்ட, நலிவடைந்த பெண்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், நரிகுறவர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வாழ்வாதார பயிற்சியளிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் நடராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.