கவுன்சிலர் சாப்பிட்ட உணவில் பல்லி; ஓட்டலுக்கு `சீல்'


கவுன்சிலர் சாப்பிட்ட உணவில் பல்லி; ஓட்டலுக்கு `சீல்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் கவுன்சிலர் சாப்பிட்ட காலை உணவில் சட்டினியில் பல்லி கிடந்ததை தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கையில் கவுன்சிலர் சாப்பிட்ட காலை உணவில் சட்டினியில் பல்லி கிடந்ததை தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

சட்னியில் பல்லி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, சேதுவாசத்திரம், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், பூவல்லூர், திருக்கோணம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் என 112 பேர் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் திட்ட பணிகளை பார்வையிட வந்தனர்.

இவர்களில் 15 பேர் நேற்று காலையில் சிவகங்கை பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றனர். அங்கு பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன் சாப்பிடும்போது அவருக்கு வழங்கப்பட்ட சட்னியில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்து ரவிச்சந்திரன் மற்றும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து அவர்கள் உடனடியாக கடை நிர்வாகத்திடம் கேட்டனர். இதற்கிடையே இதுகுறித்து அறிந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் அந்த ஓட்டலுக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், தகவல் அறிந்ததும் சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த், ஆணையாளர் பாஸ்கரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பிரபாவதி, சிவகங்கை தாசில்தார் தங்கமணி, உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் ஓட்டலுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஓட்டலுக்கு சீல்

இதை தொடர்ந்து அந்த ஓட்டலில் சாப்பிட்டவர்களுக்கு டாக்டர் கலா தேவி தலைமையில் மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்தனர். பின்னர் ஓட்டலில் இருந்த உணவு பொருட்களை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எடுத்து சென்றனர்.

பரிசோதனை முடிவு வரும் வரை ஓட்டலை மூடும்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த ஓட்டலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story