அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடல்


அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடல்
x

அரசு பள்ளிகளில் இயங்கி வந்த எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்பு மூடப்படுகின்றன. அங்கன்வாடி மையங்களுக்கு இந்த வகுப்புகள் மாற்றப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20-ம் கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் சென்னை உள்பட பெருநகரங்களில் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இங்கு சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர்களும் பணிக்கு நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை நடத்த வாய்ப்பு இல்லை என்றும், அது மூடப்பட இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை தொடக்கக்கல்வி துறை அப்போது திட்டவட்டமாக மறுத்து, வழக்கம்போல், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, ஏற்கனவே செயல்பட்டு வருவது போல, அங்கன்வாடி மையங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வகுப்புகள் மூடல்

இந்தநிலையில் தற்போது மீண்டும் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறை சார்பில் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது என்று கூறப்பட்டது. இதுகுறித்து கல்வித்துறையிடம் கேட்டபோது, அங்கன்வாடி மையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும், அதற்கான முழு பொறுப்பு சமூக நலத்துறை வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

ஆனால் சமூக நலத்துறையிடம் இதுபற்றி கேட்டால், அது போன்ற எந்த உத்தரவும் இதுவரை இல்லை. அப்படியே சமூக நலத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டாலும், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள்? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர். இதனால் யார்தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்துவார்கள்? என்று குழந்தைகளின் பெற்றோர் குழப்பத்தில் இருந்தனர்.

அமைச்சர் பேட்டி

இந்த நிலையில் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இது குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நிறுத்தப்படவில்லை. அரசு பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இருந்த எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே அருகில் எங்கு அங்கன்வாடி மையம் உள்ளதோ? அங்கு குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம். இதில் பணியாற்றிய ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்தபடி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை முழுமையாக ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story