அதிக மாணவர்களை ஏற்றிய75 ஆட்டோக்களுக்கு அபராதம்
நாகர்கோவிலில் ஒரு மாதத்தில் அதிக மாணவர்களை ஏற்றியதாக இதுவரை 75 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஒரு மாதத்தில் அதிக மாணவர்களை ஏற்றியதாக இதுவரை 75 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
தீவிர கண்காணிப்பு
நாகர்கோவில் மாநகராட்சியில் ஆட்டோக்களில் பள்ளி மாணவ, மாணவிகளை அதிகளவு ஏற்றி செல்லக் கூடாது என்றும், அவ்வாறு ஏற்றி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மாநகராட்சியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் காலை மற்றும் மாலை வேளைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண், சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று எஸ்.எம்.ஆர்.வி. சந்திப்பில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரே ஆட்டோவில் 8 குழந்தைகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதேபோல் மற்றொரு ஆட்டோவும் சிக்கியது. இதை தொடர்ந்து அதிக குழந்தைகளை ஏற்றி வந்த 2 ஆட்டோக்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளை அதிகளவு ஏற்றி வருவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து பல்வேறு அறிவுரைகளை கூறினர். இதையும் மீறி அதிக அளவு குழந்தைகளை ஏற்றி வந்தால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்தனர்.
75 ஆட்டோக்களுக்கு அபராதம்
நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த ஒரு மாதமாகவே அதிக மாணவர்களை ஏற்றி வரும் ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 75 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம், வேப்பமூடு, அண்ணா பஸ் நிலையம் முன் பகுதி, வடசேரி பகுதிகளில் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அந்த வகையில் 80 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாகவும் சிலர் சிக்கினர்.