விவசாயி மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றவர் கைது
கயத்தாறு அருகே விவசாயி மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே வெள்ளாளன் கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சேசுமணி (வயது 40). விவசாயி. இவரது அண்ணன் சமுத்திரம் கிராமத்தில் விளையும் நவதாணியங்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் வெள்ளாளர்கோட்டை கிராமத்தில் சின்னப்பாண்டி என்பவரின் மகன் மாடசாமி( 38), மக்காசோளத்தை சமுத்திரத்திடம் விற்றார். ஆனால் அதற்கு உரிய பணம் கொடுக்கும் முன்பு சமுத்திரம் இறந்து விட்டார். ஆகவே அவரது தம்பி மற்றும் மனைவியிடம் மாடசாமி பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாடசாமி டிராக்டரை வைத்து சேசுமணி மீது மோதி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைத்துடன் சேசுமணி உயிர் தப்பியுள்ளார். இதை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து மாடசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.