கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி


கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி
x

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்சார்பில் கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்சார்பில் கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் உதவி

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விர்சாத் எனும் புதியதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் அவர்களது மூலதனத் தேவையைப் பெற்றிடும் வகையில் கீழ்க்குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கிரிடிட் லைன் 1 மூலம் பயன் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும், அதிகபட்சக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

ஆண்டு வருமானம்

கிரிடிட் லைன் 2 மூலம் பயன் பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை (கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம்) உள்ள கைவினைக்கலைஞர்களில் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டியில் அதிகபட்சக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில், விண்ணப்பத்துடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, திட்ட தொழில் அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story