பிரதமரின் சுயசார்பு இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போருக்கு கடன் உதவிகள் கலெக்டர் தகவல்
பிரதமரின் சுயசார்பு இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்போருக்கு கடன் உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் சுயசார்பு இந்தியா இயக்கம் (ஆத்ம நிர்பார் பாரத் அபியான்) திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொகுப்பு மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் உள்கட்டமைப்பை ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் கீழ்கண்ட உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளது.
அதாவது, பால் பொருட்கள் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி உள்கட்டமைப்பு, . இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் உள்கட்டமைப்பு, கால்நடை தீவன உற்பத்தி உள்கட்டமைப்பு, கால்நடை அபிவிருத்தி தொழில்நுட்பம் மற்றும் கால்நடை இன மேம்படுத்துதல் உள்கட்டமைப்பு, கால்நடை கழிவுகள் மேம்படுத்துதல் மேலாண்மை உள்கட்டமைப்பு, கால்நடை நோய் மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகள் உற்பத்தி உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளது.
கடன்கள்
இந்த திட்டத்தின் கீழ் பால் மற்றும் இறைச்சிகளை பதப்படுத்தி, தரம் உயர்த்தி அதன் மதிப்பை உயர்த்தி வரு வாயை பெருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தில் வெள்ளாடு, செம்மறியாடுகள், பன்றி, கறிக்கோழி மற்றும் முட்டை கோழி வளர்ப்பதற்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் மூலம் 3 சதவீத வட்டி விகிதத்தில் 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கடன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பயனாளிகள் இத்திட்டத்திற்கு சொந்த நிதியாக 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை செலவு செய்பவராக இருக்க வேண்டும்.
இது பற்றிய விரிவான திட்ட அறிக்கை விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன் பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.