தொழில் முனைவோருக்கு ரூ.1½ கோடி மானியத்துடன் கடனுதவி
தொழில் முனைவோருக்கு ரூ.1½ கோடி வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா தெரிவித்துள்ளார்
தொழில் முனைவோருக்கு ரூ.1½ கோடி வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மானியத்துடன் கடனுதவி
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் தொழில்முனைவோர்களுக்கான ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கி வருகிறது. அதில் பட்டியலின பிரிவு தொழில் முனைவோர்க்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தினை நடப்பு நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில்முனைவோர், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும்.
உணவு பதப்படுத்துதல், ஆட்டோ மொபைல் பாகங்கள் உற்பத்தி, ஆயத்த ஆடைகள் உற்பத்தி, மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், மக்கள் பயன்பாட்டிற்கான வாகனங்கள், கான்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், குளிரூட்டப்பட்ட பதப்படுத்தப்படும் பொருட்களுக்கான வாகனம், அனைத்து உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
ரூ.1½ கோடி வரை...
மேலும் புதிய தொழில்முனைவோர் மற்றும் ஏற்கனவே நடத்திக்கொண்டிருக்கும் தொழில்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் மானியமாக 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1½ கோடி வரை வழங்கப்படும். மேலும் கடன் திரும்பச்செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில்முனைவோர் தன்சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.
பட்டியலின பிரிவைச்சேர்ந்த எந்த தனி நபரும் மற்றும் பட்டியலின பிரிவை சேர்ந்தவர்களின் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, ஒரு நபர் கம்பெனி, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை. மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாகவும், 35 சதவீதம் அரசின் பங்காக மும்முனை மானியம் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.