சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி
சிறுபான்மைமக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
சிறுபான்மைமக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரூ.30 லட்சம் வரை...
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில் தனிநபர் கடன் திட்டம்-1 ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், கிராமபுறமாக இருந்தால் ரூ.98 ஆயிரமும் இருக்க வேண்டும். திட்டம்-2 ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம்-1 ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படும். திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சமும், ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கல்வி கடன்
மேலும் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் -2ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களைச் சார்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
ஆவணங்கள்
இந்த கடன் மனுக்களுடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று. ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் - திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் இதுதொடர்பான விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.