ரூ.10 லட்சம் மானியத்துடன் கடன் உதவி


ரூ.10 லட்சம் மானியத்துடன் கடன் உதவி
x

உணவு பொருள் தயாரிப்பு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

உணவு பொருள் தயாரிப்பு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் தொடங்க

பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் டிசம்பர் மாதம் முதல் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவிக்குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம். ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவுப்பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி பெற்றவையாகும்.

ரூ.10 லட்சம் மானியம்

இத்திட்டத்தின் கீழ் உணவுப்பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து வற்றல், ஊறுகாய் தயாரித்தல், அரிசி ஆலை, உலர்மாவு மற்றும் இட்லி தோசைக்கான ஈரமாவு, அப்பளம் தயாரித்தல், மரச்செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, இனிப்பு மற்றும் கார வகை தின்பணடங்கள் தயாரித்தல், சாம்பார்பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொடிகள் தயாரித்தல், காப்பிக்கொட்டை அரைத்தல், வறுகடலை, சத்து மாவு, பால் பதப்படுத்துதல் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கவும், தொழில்நுட்பத்ததை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற http://pmfme.mofpi.gov.in/pmfme என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.

இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், எழில் நகர் திருப்பத்தூர் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story