மானியத்திட்டங்களில் பதிவு செய்ய தோட்டக்கலைத்துறை சார்பில் விண்ணப்ப மேளா
மடத்துக்குளம் வட்டாரத்தில் விவசாயிகள் மானியத்திட்டங்களில் பதிவு செய்து பயன்பெறும் வகையில் விண்ணப்ப மேளா இன்று முதல் (வியாழக்கிழமை) 2 நாட்கள் நடத்தப்படுகிறது.
கலைஞர் திட்டம்
மடத்துக்குளம் வட்டாரத்தில் 2023-2024-ம் நிதியாண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தாந்தோணி, மெட்ராத்தி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்த கிராமங்களில் தோட்டக்கலைத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விவசாயிகளின் தேவையறிந்து விண்ணப்பம் பெறுவதற்காக விண்ணப்ப மேளா நடைபெற உள்ளது. அதன்படி தாந்தோணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை), மெட்ராத்தியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த விண்ணப்ப மேளா நடைபெற உள்ளது.
முகாமில் முன்பதிவு செய்யப்படும் திட்டங்கள் வருமாறு:- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பழ நாற்றுகள் வினியோகம், காய்கறி சாகுபடி அதிகரித்தல் மற்றும் பல்லாண்டு பழப்பயிர் சாகுபடி அதிகரித்தல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பனை மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் பனை விதைகள் வழங்குதல், பனை நாற்றுகள் வழங்குதல் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் முருங்கை சாகுபடி அதிகரித்தல், தக்காளி செடிக்கு கொடி கட்டுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
மானியங்கள்
பிரதம மந்திரி விவசாய நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைத்தல், தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் தக்காளி, கத்தரி, தர்பூசணி, வெங்காயம், பப்பாளி, மிளகாய் பரப்பு அதிகரித்தல், நீர் சேமிப்புக் கட்டமைப்பு (பண்ணை குட்டை),பசுமைக் குடில் அமைத்தல், இயற்கை வேளாண்மை, மண்புழு படுக்கை, தேனீ வளர்ப்பு, சிப்பம் கட்டும் அறை, குறைந்த செலவில் வெங்காயப்பட்டறை அமைத்தல், நடமாடும் காய்கறி வண்டி மற்றும் மாநில வளர்ச்சித்தோட்டக்கலைத்திட்டத்தில் மாடித்தோட்ட கிட், பழச்செடி தொகுப்புகள், பல்லாண்டு பழப் பயிர்களில் ஊடுபயிராக காய்கறி சாகுபடி, அறுவடை பெட்டிகள் ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மேற்கண்ட திட்டங்களில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் நகலுடன் தாந்தோணி, மெட்ராத்தி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறும் விண்ணப்ப மேளாவில் பதிவு செய்து கொள்ளலாம். முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டங்களுக்கு ஏற்றவாறு மானியங்கள் வழங்கப்படும். தாந்தோணி, மெட்ராத்தி கிராம விவசாயிகள் தோட்டக்கலைத்துறை திட்டங்களில் பதிவு செய்து பயன்பெறுமாறு மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.