1,046 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி


1,046 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் ரூ.42.44 கோடி மதிப்பில் 1,046 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ரூ.42.44 கோடி மதிப்பில் 1,046 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர் காந்தி வழங்கினார்.

சான்றிதழ்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கூட்டுறவுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கி 1,046 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.42 கோடியே 44 லட்சம் மதிப்பில் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ், மதியழகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.

கடன் தள்ளுபடி

நிகழ்ச்சியில், அமைச்சர் பேசியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தர்மபுரி மாவட்டத்தில் 1989-ம் ஆண்டு முதன் முதலில் மகளிர் குழுக்களை தொடங்கி சமூக, பொருளாதாரத்தில் பெண்கள் மேம்பாடு அடைவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை துணை முதல்-அமைச்சராக இருந்த போது மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முக்கியத்துவம் அளித்து, பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து, தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சுழல்நிதி வழங்கினார்.

கடந்த மாதம் 29-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 1,046 மகளிர் குழுக்களை சேர்ந்த 10,159 மகளிர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கடந்த மார்ச் 31-ந் தேதியில் நிலுவையில் இருந்த அசல், வட்டி என மொத்தம் ரூ.42 கோடியே 44 லட்சம் மதிப்பில் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

மேலும், தகுதி வாய்ந்த குழுக்களுக்கும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தள்ளுபடி சான்று விரைந்து வழங்கப்படும். தள்ளுபடி கிடைக்கப்பட்ட அனைத்து குழுக்களுக்கும் மீண்டும் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுந்தரம், செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகராட்சி துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்கள், கூட்டுறவுத்துறை சார் பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள், பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story