விளைபொருட்களை மதிப்பு கூட்டி தொழில் செய்ய விரும்புவோருக்கு 35 சதவீத மானியத்துடன் கடன்
ராணிப்பேட்டையில் விவசாயிகள் தொழில் அதிபர்கள் ஆகும் திட்டத்தில் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் திட்டத்தில் 35 சதவீத மானியத்தில் மூலதன கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டையில் விவசாயிகள் தொழில் அதிபர்கள் ஆகும் திட்டத்தில் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் திட்டத்தில் 35 சதவீத மானியத்தில் மூலதன கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்தார்.
விண்ணப்பம் திரட்டல்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை துறை சார்பில், விவசாயிகள் தொழில் அதிபர் ஆகிட பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட விளக்கவுரை மற்றும் விண்ணப்பம் திரட்டல் முகாம் நடந்தது.
முகாமிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது :-
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் ஆகியோரின் அறிவுரைப்படி, 2 நாட்கள் இத்திட்டத்தின் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
35 சதவீத மானிய கடன்
வேளாண்மை விளை பொருட்களை மதிப்பு கூட்டி புதிதாக தொழில் செய்ய விரும்புவோர் மற்றும் ஏற்கனவே தொழில் செய்வோர் தங்கள் நிறுவனங்களை விரிவுபடுத்த இத்திட்டத்தின் மூலம் 35 சதவீதம் மானியத்துடன் கூடிய மூலதன கடன் பெற்று பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம அளவில் தொழில் முனைவோர்களை உருவாக்கிட இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சந்தைப்படுத்த ஆலோசனைகள்
முகாமில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து 95 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வேளாண்துறை சார்பில் சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை வேளாண்மை விற்பனை முறையின் மூலம் உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், விலை ஆதாரத்திடம் விற்பனை செய்து பயனடையலாம்.உற்பத்தி செய்யும் விளை பொருட்களை நல்ல முறையில் விற்பனை செய்திட ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன் (பொறுப்பு), வேளாண்மை வணிகம் துணை இயக்குனர் சீனிராஜ், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் ஆனந்தன், திட்ட மேலாண்மை கவிமுகில், சாரன், நகர்ப்புற ஊரக மேம்பாட்டு திட்ட அலுவலர் சாகுல் ஹாமித், ஊரக புத்தாக்க திட்ட பிரிவை சேர்ந்த நித்தியானந்தம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.