சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்
சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
சிவகாசி,
சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை குறித்து பேசினர். அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகள், விவசாயிகளுக்கு விளக்கினர்.
கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பட்டுப்பூச்சி வளர்ப்பு மையத்தின் கட்டிடம் பழுதடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். எம்.ஜி.ஆர். கிராமத்தில் உள்ள செங்குளம் கண்மாய், வாடியூர் கண்மாய், ஞானியார் கண்மாய், வெள்ளூர் கண்மாய், வாடி கண்மாய்களை பராமரிக்க வேண்டும்.
கடன் தள்ளுபடி
ஆணைக்குட்டம் கண்மாயின் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மூலம் பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. அதனை உடனே தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கான்சாபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வட்டி இல்லா கடன் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேவையான நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
முடிவில் தாசில்தார் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.