வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த புள்ளி விவரம் சேகரிக்க வேண்டும்
மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த முழுமையான விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்பாலைகள்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்பாலைகள், காகித ஆலைகள், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள் போன்றவை அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.
இங்கு அதிக எண்ணிக்கையில் வெளி மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.குறிப்பாக பீகார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணி புரிகின்றனர்.
இதுதவிர உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சாலைப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் வட மாநிலத் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது.மேலும் தற்போது விவசாயத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் ஒருசில பகுதிகளில் விவசாயப் பணிகளிலும் இவர்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
தினக்கூலிகள்
சொந்த ஊரில் வேலை வாய்ப்புகள் போதுமான அளவில் இல்லாத நிலையில் வருவாய் ஈட்டும் நோக்கத்தில் தமிழகம் நோக்கி வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தற்போது வருகின்றனர்.ஆனால் இவர்களால் தமிழக தொழிலாளர்களுக்கு ஆபத்து என்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. அத்துடன் ஒருசில நிறுவனங்களில் போதிய வசதிகள் இல்லாமல் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்து வருகிறார்கள். தொழிலாளர்கள் குறித்த விவரங்களை தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்து அவர்களுக்கு உரிய பணப் பலன்களை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலான வட மாநிலத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்தாலும் தினக்கூலிகளாகவே உள்ளனர். இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. அத்துடன் ஒருசில பகுதிகளில் வட மாநிலத் தொழிலாளர்களிடம் குடிமகன்கள் அத்துமீறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உள்ளூரைச் சேர்ந்த குடிமகன்கள் அவ்வப்போது வட மாநிலத் தொழிலாளர்களை மிரட்டி மது அருந்துவதற்கு பணம் பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
பணியிட பாதுகாப்பு
ஒருசில வெளி மாநிலத் தொழிலாளர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு சொந்த ஊருக்கு தப்பிச்சென்று விடுகின்றனர்.அதுபோன்ற சூழலில் அவர்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பதும், அவர்களை கைது செய்வதும் காவல் துறைக்கு சவாலான விஷயமாகவே உள்ளது. எனவே அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் ஆதார், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறையிடம் வழங்க வேண்டும்.அத்துடன் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய ஊதியம் வழங்கப்படுவதையும், பாதுகாப்பான பணியிட சூழல் உள்ளத்தையும் தொழிலாளர் நலத்துறை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு பணியிட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் வெளி மாநிலத்தொழிலாளர்கள் குறித்த முழுமையான விவரங்கள் போலீசாரிடம் இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் பல தமிழக தொழிலாளர்கள் மது போதைக்கு அடிமையாகி தொழில் திறனை இழந்து வருவதாக பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். அத்தகைய சூழலில் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து வருவது வெளி மாநில தொழிலாளர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே வெளி மாநில தொழிலாளர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதை தவிர்க்க வேண்டும். உழைத்துப் பிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.