விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கூடுதல் நேரம் வழங்க கூடாது என நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்
விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கூடுதல் நேரம் வழங்க கூடாது என்று நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி:
விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கூடுதல் நேரம் வழங்க கூடாது என்று நாட்டுப்படகு மீனவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திரேஸ்புரம் மலர் அரங்கத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் எஸ்.ஜெ.கயஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.ராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ராஜாபோஸ் ரீகன், திரேஸ்புரம் பொது பஞ்சாயத்து தலைவர் ராபர்ட் வில்லவராயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 95 சதவீதம் ஏழை, பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்கும் வகையில், இரவு நேர தொழிலை பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 1983 நடைமுறைக்கு வந்தது. அதன்படி விசைப்படகு மீனவர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். தமிழ்நாடு கடல் மீன்பிடி சட்டத்துக்கு முரணாக விசைப்படகுகள் மீன்பிடிக்க கூடுதலாக 5 மணி நேரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறப்படுவதை கண்டிப்பது, விசைப்படகுகளில் முன்பு 120 எச்.பி திறன் கொண்ட என்ஜின்கள் இருந்தன. இதனால் 16 மணி நேரம் மீன்பிடிக்க வழங்கப்பட்டது. தற்போது 240 எச்.பி. திறன் கொண்ட என்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆகையால் விசைப்படகுகள் காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்று மாலை 5 மணிக்குள் கரைக்கு திரும்பும் வகையில் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும், கடல் வளத்தை பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கவும், அனைத்து விசைப்படகுகளும் செதில் வலை மற்றும் தூண்டில் வைத்து மீன்பிடிக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும், விசைப்படகுகள் விதிமுறை மீறி பெரிதாகவும், கூடுதல் திறன் கொண்ட என்ஜின்களும் பொருத்தப்பட்டு உள்ளன. ஆகையால் மத்திய மீன்வள தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் மூலம் படகை ஆய்வு செய்ய வேண்டும், கடலோர காவல்படை, கடல் சட்ட அமலாக்கத்துறையில் கடல் நீரோட்டங்களை நன்கு அறிந்த மீனவ இளைஞர்களை பணியமர்த்தி பயிற்சி அளிக்க வேண்டும், கடல் ஆம்புலன்சு படகு ரோந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் நெல்லை நாட்டுப்படகு மீனவர் சங்கத்தலைவர் சூசை அந்தோணி, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊர்த் தலைவர் ராயப்பன் மற்றும் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.