உள்ளாட்சி இடைத்தேர்தல் நெய்வனை ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு
உள்ளாட்சி இடைத்தேர்தலில் நெய்வனை ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அடுத்த நெய்வனை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தவர் வீரமுத்து. இவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு, மரணமடைந்தார். இதையடுத்து நெய்வனை ஊராட்சிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நெய்வனை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இறந்துபோன வீரமுத்துவின் மனைவியை காத்தாயி உட்பட 5 பேர் போட்டியிட முடிவு செய்து, வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று காத்தாயியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து நெய்வனை ஊராட்சி மன்ற தலைவராக காத்தாயி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட காத்தாயிக்கு உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், நகராட்சி துணைத் தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.