உள்ளாட்சி பிரதிநிதிகள்- பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம்
பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் குத்தாலம் அருகே மங்கநல்லூரில் நடந்தது.
குத்தாலம்:
பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் குத்தாலம் அருகே மங்கநல்லூரில் நடந்தது.
கலந்தாய்வு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்துக்குட்பட்ட மங்கநல்லூர், வழுவூர், கப்பூர், தத்தங்குடி, எடக்குடி, கழனிவாசல், பெருஞ்சேரி உள்ளிட்ட 7 ஊராட்சிகளுக்கான பாரத பிரதமர் வீடு கட்டும் திட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று மங்கநல்லூர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட கலெக்டர் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகள் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். அதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்களிடையே எடுத்து கூறினார்.
ஆய்வு
முன்னதாக மங்கநல்லூர்,கப்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக் கொண்டார்.
அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், கஜேந்திரன் குத்தாலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சண்முகம், மண்டல துணை தாசில்தார் ராஜன், மங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், கப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர், வார்டு உறுப்பினர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.