பூட்டியிருந்த கடை, வீட்டில் தீ விபத்து


பூட்டியிருந்த கடை, வீட்டில் தீ விபத்து
x

பூட்டியிருந்த கடை, வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி

கடையில் தீ விபத்து

திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்தவர் சாக்கோ(வயது 55). இவர் பாரதியார் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின்சாதன உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 11-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை அவரது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள, மளவென பரவி கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

பொருட்கள் எரிந்து நாசம்

இதேபோல் திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ்நகரை சேர்ந்தவர் சூசைநாதன் (42). இவர் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். அதேபகுதியில் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு உள்ளது. அங்கு சூசைநாதனின் மாமியார் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்போது அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் அங்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக கட்டுப்படுத்தினர். அதற்குள் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், கட்டில் உள்பட ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story