கோர்ட்டுகளில் வருகிற 13-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
கோர்ட்டுகளில் வருகிற 13-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான சஞ்சய் பாபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி, போடி வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஒரு வக்கீல் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடத்தப்பட உள்ளது. இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சம்பந்தமாக கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள், கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை வழக்குகள், நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் மனுதாரர்கள் மற்றும் பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க விரும்பும் நபர்கள் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.