நீடித்த நிலையான வளர்ச்சியை எளிதாக பெற முடியும்
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் நீடித்த நிலையான வளர்ச்சியை எளிதாக பெற முடியும் என சிறப்பு செயலாளர் ஹர்சகாய் மீனா கூறினார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் நீடித்த நிலையான வளர்ச்சியை எளிதாக பெற முடியும் என சிறப்பு செயலாளர் ஹர்சகாய் மீனா கூறினார்.
மண்டல கருத்தரங்கு
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த மண்டல கருத்தரங்கு திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்பு செயலாளர் ஹர்சகாய் மீனா தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு செயலாளர் ஹர்சகாய் மீனா கூறியதாவது:-
2030-ம் ஆண்டிற்குள் நீடித்த தன்மையுடைய உலகை கட்டமைப்பதற்கு, பொருளாதார வளர்ச்சி, சமூக நிலைமை, சுற்றுப்புற பாதுகாப்பு ஆகிய மூன்று குறிக்கோள்களை சாதிப்பதே நீடித்த நிலையான வளர்ச்சியின் முக்கிய நோக்கமாகும். மக்கள் நிலையான வளர்ச்சி, அமைதி, நல்லுறவு ஆகியவற்றை பெறுவதற்கு 17 வகையான இலக்குகள் அடங்கியுள்ளன. இந்த 17 வகையான இலக்குகளையும் எளிதாக அடைய வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சி குறியீடுகள்
தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களான நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம், முதியோர் உதவித்தொகை, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், புதுமைப்பெண், மதிய உணவு திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், பள்ளி மேலாண்மை குழு, அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் நீடித்த நிலையான வளர்ச்சி குறியீடு உள்ளடக்கியுள்ளதால் நீடித்த நிலையான இலக்குகளை தமிழகத்தில் எளிதாக அடைய முடியும்.
தமிழகத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் முன்னேற விழைகின்ற மாவட்டங்களின் பட்டியலில் உள்ளன. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே வளர்ச்சி குறியீடுகள் அடைவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதன்மை மாநிலம்
மற்ற மாவட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு நீடித்த நிலையான இலக்கினை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் தன்னிறைவு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு இந்தியாவில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலமாக்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில ஆலோசகர் சுஜாதா, மாவட்டங்களை சேர்ந்த அனைத்துத்துறை மாவட்ட தலைமை நிலை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.