'வாழ்க தமிழ்நாடு' - தேசிய வாக்காளர்கள் தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


வாழ்க தமிழ்நாடு - தேசிய வாக்காளர்கள் தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய வாக்காளர்கள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை,

சென்னை கிண்டியில் கடந்த 5-ம் தேதி காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும்' என்றார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து 2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த 9-ம் தேதி தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள 65வது பத்தியை கவர்னர் ஆர்.என். ரவி வாசிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பத்தியில், தமிழ்நாடு அமைதிப் பூங்கா, சமூகநீ்தி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி' என்ற வார்த்தையும் கவர்னர் வாசிக்க மறுத்தார்.

மேலும், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை தாண்டி கவர்னர் மேலும் சில கருத்துக்களை கூறினார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதில் தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று கவர்னர் கடந்த சில நாட்களுக்கு முன் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் தனது கருத்துக்களை கூறியதற்காக அவையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்க்கு எதிராக திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பினர்.

கவர்னர் உரைக்கு பின் அவையில் பேசிய முதல்-அமைச்சர் முக ஸ்டாலின், அரசின் உரையை கவர்னர் முழுமையாக படிக்காதது வருத்தம் அளிப்பதாகவும், அவர் பேசியது அரசின் கொள்கைக்கு மாறானது என்றும் கூறினார். மேலும், அரசு தயாரித்து கொடுத்து அச்சிடப்பட்ட உரையை கவர்னர் முறையாக படிக்காதது விதியை மீறிய செயல் ஆகும்.

எனவே, அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவை தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும் அவைக்குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதேபோல் அச்சிடப்பட்டதற்கு மாறாக கவர்னர் படித்த பகுதிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார்.

இந்த தீர்மானங்களை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். கவர்னர் உரைக்கு எதிராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்துகொண்டிருந்தபோது, கவர்னர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின்னர் முதல்-அமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் பேரவையால் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் கூட்டம் நிறைவடையும் முன்பே, தேசியகீதம் இசைக்கும் முன்பே கவர்னர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியே சம்பவத்திற்கு பல்வேறு தரப்பும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மற்றொரு சர்ச்சையும் எழுந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு கவனர் என்பதற்கு பதில் தமிழக கவர்னர் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த அழைப்பிதலில் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி மத்திய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தன.

கவர்னர் ஆர்.என்.ரவியின் அடுத்தடுத்த சர்ச்சைகள் குறித்து டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் ஜனாதிபதியை சந்தித்து தமிழ்நாடு கவர்னருக்கு எதிரான புகாரை வழங்கினர். இதனையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்.

டெல்லியில் இருந்து வந்த பிறகு தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கமளித்திருந்தார். இந்த அடுத்தடுத்த சம்பவங்களை தொடர்ந்து நாளை உள்ள குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் தமிழ்நாடு கவர்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்பு உரையாற்றினார்.

தனது உரையின் முடிவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, உங்கள் அனைவருக்கும் சிறந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளர்கள் உங்கள் வாழ்வில் சிறந்த எதிர்க்காலம் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றி வாழ்க தமிழ்நாடு... வாழ்க பாரதம்' என்று தனது உரையை முடித்தார்.

தமிழ்நாட்டை தமிழகம் என கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களாக குறிப்பிட்டு வந்த நிலையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு என கூறி தனது உரையை முடித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், இந்திய குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தையொட்டி நாளை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story