மண்ணை சாலையில் சிதறிச்சென்ற 2 லாரிகள் சிறைபிடிப்பு
உடுமலை பகுதியில் மண் எடுத்து செல்லும் லாரிகளில் இருந்து சாலைகளில் சிதறி விழும் மண்ணால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று 2லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
நான்கு வழிச்சாலை பணி
பொள்ளாச்சியில் இருந்து உடுமலை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக திண்டுக்கல்லை அடுத்துள்ள கமலாபுரம் வரை நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் உடுமலையை அடுத்துள்ள கணபதிபாளையம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பாலப்பம்பட்டி மற்றும் மடத்துக்குளம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும்பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக உடுமலையை அடுத்துள்ள அமராவதி அருகில் உள்ள பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் மண் எடுத்துக்கொண்டு தளிச்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த பணிகளுக்காக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுவதாகக்கூறப்படுகிறது. இந்த லாரிகளின் மேல்பகுதியில் தார்பாய் போட்டு மூடப்படுவதில்லை. இதனால் இந்த லாரிகளில் இருந்து மண் சரிந்து சாலைகளில் விழுந்து சிதறிகிடக்கிறது.
அதனால் இருசக்கர வாகனங்களில் வருகிறவர்கள் மண்ணில் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் டாரஸ் டிப்பர் லாரிகளில் மண் எடுத்துசெல்லும்போது தார்பாய் போடவேண்டும், டிப்பர் லாரிகளை வேகமாக இயக்கக்கூடாது என்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரைஎடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.உடுமலையில் தளி சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலை.
லாரிகள் சிறைபிடிப்பு
இந்த நிலையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில், அமராவதி நகர் பகுதியில் இருந்து லாரிகள் மண் எடுத்துக்கொண்டு தளிசாலையில் உடுமலையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரிகள் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலை பிரிவு பகுதியில் வந்துகொண்டிருந்தது. அப்போது வேகத்தடையில் ஏறி இறங்கும்போது லாரியில் இருந்த மண் மற்றும் சில கற்கள் சரிந்து விழுந்து சிதறியுள்ளது. அப்போது அந்த இடத்தில் வந்து கொண்டிருந்த கார் மீது கற்களுடன்மண் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.அங்கு பொதுமக்கள் திரண்டு, அங்கிருந்த 2 லாரிகளை சிறைபிடித்தனர். இதைத்தொடர்ந்து போடிபட்டி ஊராட்சி தலைவர் டி.சவுந்தரராஜன், உடுமலை நகராட்சி துணைத்தலைவர் எஸ்.கலைராஜன், நில வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்ட வருவாய்துறையினர் ஆகியோர்அங்கு விரைந்து வந்தனர். அந்த 2 லாரிகளும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் சாலையோரம் நிறுத்தப்பட்டன. அப்போது, தார்பாய் போடாமல் லாரிகள் வேகமாக இயக்கப்படுவது மற்றும் அந்த லாரிகளில் இருந்து மண் சரிந்து சாலையில் விழுந்து சிதறுவதால் விபத்து ஏற்படுவது குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்காதது போன்ற கோரிக்கைகளுக்குபொதுமக்கள், வருவாய்த்துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.அத்துடன் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன் அந்த இடத்தில் சாலையில் சிதறிக்கிடந்த மண் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பிரச்சினையில் அந்த இடத்தில் 2 லாரிகளும் காலை 8.30 மணிவரை 11/2 மணிநேரம் சிறைபிடிக்கப்பட்டிருந்தது.