மண் ஏற்றிச்செல்லும் லாரிகளால் ஆபத்து


மண் ஏற்றிச்செல்லும் லாரிகளால் ஆபத்து
x
திருப்பூர்


மண் ஏற்றிச்செல்லும் லாரிகளால் ஆபத்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார்கள் கண்ணாமணி (உடுமலை), செல்வி (மடத்துக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-

சிங்காரம்:- தளி பகுதிக்கு தற்போது ஜல்லிபட்டி கிராம நிர்வாக அதிகாரி பொறுப்பு போடப்பட்டுள்ளது. இதனால் பணிகள் தேக்கமடைந்துள்ளது. எனவே திருமூர்த்திமலை கிராம நிர்வாக அதிகாரிக்கு பொறுப்பு வழங்க வேண்டும். ஜல்ஜீவன் திட்டத்தில் கிராமப் பகுதிகளுக்கு முழுமையாக குடிநீர் வழங்க வேண்டும்.

ஆவணம் இல்லாத வாகனங்கள்

கோபால்:- 4 வழிச்சாலைக்கு மண் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிக வேகத்தில் இரவு பகலாக இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான வாகனங்களுக்கு காப்பீடு, தகுதிச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. மேலும் மண்ணை மூடாமல் கொண்டு செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அதிக பாரம் ஏற்றுவதால் சாலை பழுதடைந்து வீணாகிறது. எனவே அந்த வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிபட்டி பகுதியில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலம் தற்போது வீட்டு மனையாக மாற்றப்படுகிறது.

இதனால் அதனை வாங்குபவர்களும் சிக்கலில் மாட்டும் நிலை உருவாகும். ஈசல்திட்டு மலைவாழ் குடியிருப்பு மக்கள் உடல் நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கீழே இறங்கி வரும்போது உடனடியாக மீண்டும் மேலே செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மலைவாழ் மக்கள் தங்கும் வகையில் அடிவாரப்பகுதியில் வசதி செய்து தர வேண்டும். காட்டுப்பன்றிகளால் பயிர் சேதம் மட்டுமல்லாமல் மனிதர்களின் உயிருக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

சுந்தரராஜன்:- பூளவாடி மின் பகிர்மான வட்டத்தில் வசவநாயக்கன்பட்டி பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குவதால் விபத்து அபாயம் உள்ளது.

மதுசூதனன்:- குடிமங்கலத்தையடுத்த ஆத்துக்கிணத்துப்பட்டியில் நிலசீர்திருத்த சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட 105 ஏக்கர் நிலத்தில் 25 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

அதனை மீட்டு ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபெரிய வாளவாடி நடுக்குட்டை உள்ளிட்ட இடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை தாலுகா அலுவலகத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு லஞ்சம் பெறுகிறார்கள். தாந்தோணி, ராமேகவுண்டன் புதூர், துங்காவி பகுதிகளில் அதிக அளவில் மண் எடுக்கப்படுகிறது. இந்த மண் தூசியால் பட்டு வளர்ப்பு முற்றிலும் அழிந்து ஒரு விவசாயி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு தீர்வு காணாவிட்டால் அந்த விவசாயி குடும்பத்துடன் லாரி முன் விழுவதாக தெரிவித்துள்ளார்.

காண்டூர் கால்வாய் மேம்பாடு

பரமசிவம்:- ரூ.200 கோடி செலவு செய்து காண்டூர் கால்வாய் மேம்படுத்தப்பட்டது. மேலும் மீதமுள்ள பணிகளை முடிக்க ரூ.72 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த பகுதியில் உள்ள பள்ளங்களால் நீர் இழப்பு ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை உருவாகிறது.

சங்கராமநல்லூர் கோதையம்மன் குளத்துக்கு தண்ணீர் செல்லும் ராஜ வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வடபூதனம் ெரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை இல்லாததால் விவசாயிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

ஸ்ரீதர்:- குடிமங்கலம் ஒன்றியத்தில் 50 மூட்டை சிமெண்டுக்கு 2020-ம் ஆண்டு பணம் கட்டியவருக்கு அரசு சிமெண்டு இதுவரை கிடைக்கவில்லை. அனிக்கடவு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 18 சென்ட் இடம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

லோகு:- சின்ன வாளவாடியில் சமுதாய நலக்கூடம் மேற்கூரை சேதமடைந்துள்ளது. கால்நடை ஆஸ்பத்திரி பழைய கட்டிடத்தை புனரமைக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story