ஆனி உற்சவ திருவிழாவில் ஊஞ்சலில் எழுந்தருளிய முருகப்பெருமான், தெய்வானை
திருப்பரங்குன்றம் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழாவையொட்டி முருகப்பெருமான் தெய்வானையுடன் ஊஞ்சலில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழாவையொட்டி முருகப்பெருமான் தெய்வானையுடன் ஊஞ்சலில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
ஆனி ஊஞ்சல் உற்சவ விழா
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி மாதத்தில் ஊஞ்சல் உற்சவ விழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அதேபோல இந்த ஆண்டிற்கானஆனி ஊஞ்சல் உற்சவ விழா நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கியது.
திருவிழாவையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
முருகப்பெருமான் ஊஞ்சலாடினார்
இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஊஞ்சலில் அம்பாளுடன் முருகப்பெருமாள் அமர்ந்து ஊஞ்சலாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது ஓதுவாரால் திருவாசத்தில் இருந்து பொன்னுஞ்சல் பாடல் பாடப்பட்டது. அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரோ என்று பக்தி கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர். இதேபோல வருகின்ற 13-ந் தேதி வரை தினமும் இரவு 7 மணியளவில் சுவாமி ஊஞ்சலில் ஆடும் நிகழ்ச்சி நடைபெறும்.
முக்கனிகள் படையல்
திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 13-ந் தேதி மதியம் 12 மணியளவில் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான், கற்பக விநாயகர், துர்க்கை அம்பாள், பவளக்கனிமாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர் ஆகிய 5 விக்ரங்களுக்கும் வாழை, பலா, மா ஆகிய முப்பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
இதே உற்சவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் சுவாமிகளுக்கு முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.