நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாயில் பேப்பர் அட்டை பார லாரி கவிழ்ந்தது-டிரைவர் படுகாயம்
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாயில் பேப்பர் அட்டை பார லாரி கவிழ்ந்ததில், டிரைவர் படுகாயம் அடைந்தார்.
பேப்பர் அட்டை பார லாரி
ஆந்திர மாநிலத்தில் இருந்து பேப்பர் அட்டைகளை ஏற்றி கொண்டு கோவைக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை திருச்சியை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 47) ஓட்டினார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தொப்பூர் கணவாயில் நேற்று காலை இந்த லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் தொப்பூர் கணவாய் 2-வது வளைவில் சாலையில் கவிழ்ந்தது.
இதனால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் லாரியின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் குமார் படுகாயம் அடைந்தார்.
விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர், குமாரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய லாரி கிரேன்உதவியுடன் மீட்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.