அதியமான்கோட்டையில் அடுப்பு கரி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது-டிரைவர், கிளீனர் காயம்
நல்லம்பள்ளி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புனேவிற்கு அடுப்பு கரி ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 47) ஓட்டி சென்றார். நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய லாரி, சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் மகாலிங்கம் மற்றும் கிளீனர் காயம் அடைந்தனர். மேலும் சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.