கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ஆலங்குளம் அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை பகுதியில், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் சுகாதாரத்திற்கு கேடான பொருட்களையும், மருத்துவ கழிவுகளையும் கொண்டு வந்து கொட்டப்படுவதாக, நெட்டூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் மருத்துவ மற்றும் கோழி கழிவுகளை ஏற்றி வந்து குருவன்கோட்டை பகுதியில் உள்ள முருகன் என்ற நல்லவன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி எரிக்கப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த மரிய டேவிட் மகன் பார்த்திபராஜ் (39), ஈரோடு பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் சுரேஷ் என்பவரின் மனைவி சத்தியவதி மற்றும் கழிவு பொருட்களை தீவைத்து எரிக்க முயன்ற முருகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பார்த்திபராஜை கைது செய்தனர். மேலும் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.