அரசு பஸ் மீது கல்வீசிய லாரி டிரைவர் கைது
குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிற்காததால் அரசு பஸ் மீது கல்வீசிய சம்பவத்தில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிற்காததால் அரசு பஸ் மீது கல்வீசிய சம்பவத்தில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பஸ் மீது கல்வீச்சு
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 30-ந் தேதி இரவு திங்கள்சந்தை நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஒருவர் ஏறினார். அவர் வெட்டூர்ணிமடம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். ஆனால் பஸ் அந்த நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் சரியான நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தவில்லை என்று கூறி பஸ்சின் கண்டக்டரான குளச்சலை சேர்ந்த ராஜ் என்பவரை தாக்கினார். மேலும் பஸ்சின் கண்ணாடியை கல்வீசி உடைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்டமாக சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது பஸ் மீது கல்வீசிய நபரின் உருவம் பதிவாகி இருந்தது. ஆனால் சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டு இருந்ததாலும் வாலிபரின் முகம் சரியாக தெரியவில்லை. இதனால் அவரை உடனடியாக கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது.
டிரைவர் கைது
எனினும் கண்டக்டர் கூறிய அடையாளம் மற்றும் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய உருவம் ஆகியவற்றை வைத்து வெட்டூர்ணிமடம், பள்ளிவிளை, கேசவ திருப்பாபுரம், கட்டையன்விளை ஆகிய பகுதிகளில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் கண்டக்டரை தாக்கி பஸ் மீது கல்வீசிய நபர் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான பிரபு (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பிரபுவை போலீசார் கைது செய்தனர்.